sudden Heavy rain hits chennai PT
தமிழ்நாடு

சென்னையில் 10 ஆண்டுகளுக்குப் பின் ஏப்ரலில் கொட்டிய 10 செ.மீ மழை! திடீர் மழைக்கு காரணம் என்ன?

சென்னையில் இன்று திடீரென இடியுடன் கூட மழை கொட்டித்தீர்த்தது. திடீர் மழைக்கான காரணம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கொடுத்த விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.

PT WEB

கோடை வெயில் வாட்டிவந்த நிலையில், வாராது வந்தது போல மழை பெய்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை குளிர்வித்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து வெயில் அதிக அளவு பதிவாகி வந்தது. கொளுத்தும் வெயிலை விட உணரப்படும் வெப்பம் அதிகமாக இருந்ததால் இரவு நேரத்திலும் புழுக்கத்தால் மக்கள் தவித்துவந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக இன்று காலை மேகம் சூழ்ந்து மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சூளைமேடு, அண்ணாநகர், கோட்டூர்புரம், வடபழனி, கோயம்பேடு, மயிலாப்பூர், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இதேபோல முகப்பேர், புதுர், வில்லிவாக்கம் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

மணலி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மழையை எதிர்பாராததால் அதற்கேற்ற முன்னேற்பாடுகளுடன் வராத மக்கள் மழையில் நனைய நேரிட்டது. என்றாலும் இத்தனை நாள் கொளுத்திய வெயிலுக்கு இதமான சூழல் காணப்பட்டது.

மழை காரணமாக மும்பையில் இருந்து சென்னை வந்த ஏர்இந்தியா விமானம், பெங்களுருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் 3 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தரமணி சாலையில் குளம்போல தண்ணீர் தேங்கியதால் அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள், மழை விட்ட நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மேலும் அவதியடைந்தனர்.

திடீர் மழை ஏன்..? ஹேமச்சந்திரன் கொடுத்த பதில்

பத்தாண்டுகளுக்குப் பிறகு சென்னையில் பல இடங்களில் ஏப்ரல் மாதத்தில் பத்து சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், காட்டாங்குளத்தூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதேபோல் திருப்போரூர் மானாமதி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

திடீர் மழைக்கான காரணம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கொடுத்த விளக்கத்தை கீழே உள்ள காணொளியில் பார்க்கவும்.