தமிழ்நாடு

“கல்யாணத்தை நிறுத்துங்க?” - சினிமா பாணியில் மணமேடையில் நடந்த திடீர் திருப்பம்

“கல்யாணத்தை நிறுத்துங்க?” - சினிமா பாணியில் மணமேடையில் நடந்த திடீர் திருப்பம்

Rasus

தாலிகட்டும் நேரத்தில் பெண் ஒருவர் திருமணத்தை தடுத்து நிறுத்தியதால் திருமண மண்டபத்தில் பரபரப்பு நிலவியது.

மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்த முனியாண்டி என்ற இளைஞருக்கும், மதுரையை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை 10 மணிக்கு திருமணம் நடைபெற இருந்தது. உறவினர்கள், நண்பர்கள் கூடியிருந்த நிகழ்வில் தாலி கட்டும் நேரமும் வந்தது.

ஆனால் அந்த நேரத்தில் திடீரென பெண் ஒருவர், திருமண மண்டபத்திற்குள் நுழைந்து திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு சத்தமிட்டார். 37 வயதான அவர் மதுரை விக்கிரமங்கலம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரி ஆவார். மாப்பிள்ளையாக அமர்ந்திருக்கும் முனியாண்டி தன்னை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டு, தற்போது தனக்கே தெரியாமல் மற்றொரு பெண்ணை செய்துக் கொள்ள இருக்கிறார் என்றும் ஈஸ்வரி குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த அனைத்து மகளிர் போலீசார் மணமகனையும், இளம்பெண்ணையும் அழைத்து சென்றனர். இதனிடையே மணமகனின் வீட்டார் தங்களை மோசடி செய்து ஏமாற்றிவிட்டதாக கூறி மணப்பெண் வீட்டாரும் புகார் மனு அளித்தனர்.

முடிவில் மணமகளை பெற்றோரின் வீட்டிற்கே போலீசார் அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் மணமகனிடமும், இளம்பெண்ணிடம் விசாரணை நடத்திவருகின்றனர். மணமகன் முனியாண்டி காதலித்து ஏமாற்றியதாக கூறும் ஈஸ்வரி, மணமகனுக்கு சித்தி உறவு என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கும் போது முகவர்களின் தவறான தகவல்களை நம்பியதால் மணமேடை வரை சென்று திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக இதுபோன்ற சம்பவங்களை திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம். ஆனால் தாலி கட்டும் நேரத்தில் திருமணம் நின்ற சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் ஒரு சோகத்தையே ஏற்படுத்தியது.