வீடியோ சர்ச்சையைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பாடகி சுசித்ரா புகார் அளித்துள்ளார். தமது ட்விட்டர் பக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கைப்பற்றி, தவறாகப் பயன்படுத்துவதாக அவர் முறையிட்டுள்ளார்.
பிரபல பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கில் தனுஷ், த்ரிஷா, அனிருத், ஹன்சிகா உள்ளிட்டோரின் சர்ச்சைக்குரிய படங்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது ட்விட்டர் கணக்கில் ஊடுருவல் நடந்திருப்பதாக சுசித்ராவும் அவரது கணவர் கார்த்திக்குமாரும் விளக்கம் அளித்தனர். இருப்பினும் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக நடிகர், நடிகைகளின் நெருக்கமான படங்களும் வீடியோக்களும் வெளியாகி வந்தன.
தனுஷ், அனுயா, சஞ்சிதா ஷெட்டி, த்ரிஷா, அமலாபால் உள்ளிட்டோரின் தனிப்பட்ட படங்களை வெளியிட்டதோடு, வீடியோவை அடுத்தடுத்து வெளியிடப் போவதாக பதிவுகள் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று பிற்பகலில் ட்விட்டரில் இருந்தே, சுசித்ரா வெளியேறினார்.
சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல்களில் உண்மையில்லை என அவரது கணவர் கார்த்திக் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் காவல் துறையில் சுசித்ரா தரப்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. ட்விட்டரில் தமது பெயரைத் தவறாகப் பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.