ரஜினிகாந்த் இந்து மதத்திற்காக சோ விழாவில் எப்படி பேசினாரோ அதேபோன்று எதிர்காலத்திலும் பேசினால் ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி. இவர் இந்தக் கட்சியில் இருந்தாலும் பல நேரங்களில் தலைமைக்கு எதிராக பல கருத்துகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் இன்று கோவை விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பல்வேறு கேள்விகள் குறித்து பதிலளித்தார்.
செய்தியாளர்களிடம் பேசும் போது, “சிஏஏவினால் எந்தப் பிரச்னையும் இல்லை. யாருடைய குடியுரிமையும் பறிக்கப் போவதில்லை. என்.பி.ஆர். வரவில்லை, அதனால் ஆலோசனை செய்வது தவறு. யாருக்கெல்லாம் குடியுரிமை கொடுக்க வேண்டுமோ கொடுத்தாகிவிட்டது. இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. சி.ஏ.ஏ. அமல்படுத்தியாகிவிட்டது. பல நாட்டினருக்கும் நம் நாட்டின் பெயரைக் கெடுக்க ஆர்வம் உள்ளது. இந்துக்கள் ஒற்றுமையைக் கெடுப்பதற்கும் நாட்டின் பெயரைக் கெடுப்பதற்கும் சிலர் சதி செய்து வருகின்றனர். நாட்டை விட்டு முஸ்லிம்கள் விரட்டிக்கப்படுவார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?
நாட்டின் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். ரஜினிகாந்த் இந்து மதத்திற்காக சோ விழாவில் எப்படி பேசினாரோ அதேபோன்று எதிர்காலத்திலும் பேசினால் ஒத்துழைப்பு கொடுப்பேன். பாஜக தனியாக நின்று ஜெயிக்க முடியும். அதனால் அதற்கான முயற்சி செய்யவில்லை. அகில இந்திய அளவில் வரப் போகும் பாஜக புதிய தலைவருக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்” என்றார். மேலும் ஜனநாயக நாட்டில் போராட்டம் செய்யலாம்; அச்சமுண்டாக்கி பொய் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது.
மேலும், ‘சசிகலா விடுதலையானால் அரசியலில் பெரிய மாற்றம் வரும். சசிகலாவை விடுத்து அரசியல் செய்வது கஷ்டம்.தமிழ்நாட்டில் சினிமாதான் பார்ப்பார்கள். சட்டம் படிக்க மாட்டார்கள்’ என்றார்.