விஜய் பரப்புரை கரூர் pt web
தமிழ்நாடு

"சிசிடிவி, ட்ரோன் காட்சிகளை ஒப்படையுங்கள்" - ஆதவ் மற்றும் நிர்மல் குமாருக்கு சம்மன்

கரூரில் விஜய் பரப்புரையின்போது வாகனத்தில் இருந்து பதிவான சிசிடிவி மற்றும் ட்ரோன் காட்சிகளை ஒப்படைக்குமாறு ஆதவ் அர்ஜூனாவிற்கும், நிர்மல் குமாருக்கும் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

PT WEB

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி விஜய் மேற்கொண்ட பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில், 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

ஆதவ் அர்ஜூனா

இவ்விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. பரப்புரை நடந்த இடத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாக தவெக தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசு ஆதாரங்களுடன் விளக்கமளித்தது.

இந்நிலையில், தவெக தரப்பில் பதிவு செய்யப்பட்ட பிரசார வாகனத்தில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் ட்ரோன் காட்சிகள் போன்றவற்றை ஒப்படைக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளாக நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜூனாவிற்கு காவல் துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.