காவல்துறையினர் கைது செய்ய வருகிறார்கள் என திருடனுக்கு தகவல் கொடுத்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில், குருமூர்த்தி என்பவர் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் பணிபுரிந்தபோது, அங்கு மகேஷ் என்ற திருடனை பிடிக்க காவல்துறை மும்முரம் காட்டியது. காவல்துறையினர் தன்னை நெருங்குவதை எப்படியோ தெரிந்து கொண்ட மகேஷ், அவர்களிடம் இருந்து தொடர்ந்து தப்பி வந்துள்ளார்.
தீவிர முயற்சிக்குப்பின் மகேஷை கைது செய்த காவல்துறையினர், அவரின் செல்போனை ஆய்வு செய்துள்ளனர். அதில், உதவி ஆய்வாளர் குருமூர்த்தி, மகேஷுக்கு தகவல் கொடுத்தது தெரியவந்தது. துறை ரீதியான விசாரணையில் குருமூர்த்தி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.