தமிழ்நாடு

கஜா புயல் பாதித்த மக்களுக்கு 55 வீடுகளைக் கட்டிக் கொடுத்த மாணவர்கள்

webteam

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியார் பள்ளி மாணவர்கள் வீடுகள் கட்டிக் கொடுத்து, திறப்புவிழாவும் நடத்தியுள்ளனர்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு மொத்தம் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. கஜா புயலின் கோரதாண்டவத்திற்கு இரையான தஞ்சை மாவட்டத்தின் கடைகோடி பகுதியான அதிராம்பட்டினம் அருகில் உள்ளது கீழத்தோட்டம். இந்தக் கிராம மக்கள் வீடுகளை இழந்து தவித்த நிலையில், சேலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும், தஞ்சை சமூக ஆர்வலர்களுடன் ஒன்றிணைந்து, 50க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி தந்து பாதிக்கப்பட்ட மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளனர். 

கஜா புயலின் தாக்கத்திலிருந்து 80 நாட்களாகியும் இன்னும் மீளமுடியாமல் பரிதவிக்கும் இக்கிராம மக்கள் குடிசைகளை இழந்து தவித்து வந்த நிலையில், அதை சீர்செய்து கொடுக்க வேண்டிய தமிழக அரசு கண்டுகொள்ளாத நிலையில் தனியார் பள்ளி மாணவர்கள் மனிதாபிமானத்துடன் செய்த உதவிகள் அக்கிராம மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை சமூக ஆர்வலர் உஷா நந்தினியுடன் இணைந்து சேலத்திலுள்ள தனியார் பள்ளி மாணவர்களுடன், அவர்களின் பெற்றோர்களும் இணைந்து திரட்டிய 21 லட்சம் ரூபாய் நிதியுடன் தலா 55 ஆயிரம் மதிப்பில் 55 வீடுகளையும் மற்றும் கிணறு ஆகியவற்றை கிராம மக்களுடன் சேர்ந்து கட்டிக் கொடுத்துள்ளனர். 

மேலும் அந்த வீட்டை மாணவர்களே திறந்து வைத்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “ இதுபோன்ற செயலில் அனைவரும் ஈடுபட வேண்டும். நாங்கள் இந்த வீடுகளை திறந்து வைத்திருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தனர்.

தகவல்கள் : காதர் உசேன் , தஞ்சாவூர்.