கதிராமங்கலம், தஞ்சாவூர் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுக்கு ஆதரவாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி கதிராமங்கலம் கிராம மக்கள் இன்று 6 வது நாளாக சமையல் செய்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தின் போது கைதான மீத்தேன் எதிர்ப்புக் குழு தலைவர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை வழக்கின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தியும் கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் கதிராமங்கலம் கிராம மக்களும் இணைந்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.