பள்ளி மாணவ, மாணவிகள் பிரச்னைகள் இருந்தால் தெரிவிக்க உதவி எண்களை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் அருகே பணப்பாக்கம் அரசுப் பள்ளி மாணவிகள் நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அடுத்து, அந்தப் பள்ளிக்கு ஆய்வு நடத்த வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் சென்றார். அப்போது அவர் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார். மேலும் இது போன்ற விஷயங்கள் வரும் போது 1098, மற்றும் 0416 - 2222 310 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார்.
பனப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்புப் படித்த தீபா, சங்கரி, மணீஷா மற்றும் ரேவதி ஆகிய நான்கு மாணவிகளும் கடந்த வாரம் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் மரணத்திற்கு ஆசிரியர்கள் திட்டியதே காரணம் என்று அந்த மாணவிகளின் தோழிகளும் பெற்றோரும் கூறினர். இது தொடர்பாக தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியை ஆகியோர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்த நிலையில் மேலும் இரண்டு ஆசிரியைகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.