தமிழ்நாடு

பள்ளிக்குச் செல்ல தினமும் அல்லல்படும் மலைக்கிராம மாணவர்கள்

பள்ளிக்குச் செல்ல தினமும் அல்லல்படும் மலைக்கிராம மாணவர்கள்

webteam

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகில் உள்ள மலைக்கிராமத்தில், அதிகாலை ஐந்தரை மணிக்கு பள்ளிக்கு புறப்படும் மாணவ, மாணவியர், பள்ளி முடிந்து இரவு பத்துமணிக்குத் தான் வீடு திரும்புகிறார்கள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் குன்றி மலைக்கிராமம் அமைந்துள்ளது. இயற்கையோடு ஒன்றி வாழும் இக்கிராம மக்களின் முக்கிய தொழில் விவசாயம். 4500 பேர் வாழும் இந்தக் கிராமத்தில், அரசு உதவி பெறும் தனியார் நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. இங்குள்ள மாணவ, மாணவிகள், பிளஸ் டூ படிக்க 15 கிலோமீட்டர்‌ தொலைவில் உள்ள கடம்பூர் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். இதற்காக மாணவர்கள் தினம் தினம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

சத்தியமங்கலத்தில் இருந்து குன்றி கிராமத்துக்கு காலை மாலை என இருவேளைகளில் மட்டுமே அரசு பேருந்து வந்து செல்கிறது. கடம்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவியர் அதிகாலை 4 மணிக்கு எழுந்து புறப்பட்டால் மட்டுமே காலை 5.30 மணிக்கு வரும் அரசு பேருந்தை பிடித்து கடம்பூர் பள்ளிக்குச் செல்ல இயலும். அதேபோல பள்ளி முடிந்து கடம்பூரில் இருந்து வீடு திரும்ப இரவு 10 மணி ஆகிவிடுகிறது.

கல்வி, வேலைவாய்ப்பு, தொலைதொடர்பு, மருத்துவம், போக்குவரத்து என எந்த அடிப்படை தேவைகளும் நிறைவேறாமல் உள்ளதால் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று குன்றி கிராம மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.