திருச்சியில் ட்ரோனை கண்டதும் மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
திருச்சியில் 50 இடங்களில் சோதனை மையங்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக மாநகர காவல்துறையினர், ட்ரோன் கேமரா மூலமும் கண்காணித்துவருகிறார்கள்.
கண்காணிப்பின்போது, திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட விசுவாஸ் நகர் பகுதியில் பள்ளி மாணவர்கள் பெரிய மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. ட்ரோன் வருவதை பார்த்து அங்கிருந்து அனைவரும் ஓட்டம் பிடித்து ரயில் தண்டவாளத்தில் ஓடினர். பின்னர் அங்கிருந்த முட்புதரில் ஒளிந்துகொண்டனர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
இதேபோல மன்னார்குடியிலும், ஊரடங்கை மீறி வெளியே திரிபவர்களை காவல்துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்தனர். சாலைகளில் தடுப்புகளை அமைத்து வாகனங்களை சோதனை செய்யும் காவல்துறையினர், அவசியமின்றி வருவோரை எச்சரித்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார்கள்.