தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர் அமைப்புகள், இளைஞர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி கோட்டை ரயில் நிலையத்தினுள் நுழைந்த மாணவர் அமைப்பினர் சிலர், பாலக்காடு செல்லும் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து அவர்களை கைது செய்ய முயன்றனர். இருப்பினும் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்ட படி தண்டவாளத்தில் அமர்ந்தும் படுத்தும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மாணவர்களை கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.