தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்

webteam

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் இந்திய வாலிபர் சங்கம் சார்பில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி  குமரெட்டியார்புரம் கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனிடையே வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க முயற்சியிலும் ஈடுபட்டது. இதற்கான அனுமதி கிடைக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்ட பணிகளையும் மேற்கொண்டது. எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த மக்கள், ஆலையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் உயிர்வாழ தகுதியற்ற நிலை ஏற்படும் என்பதை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அதன்பின் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் குமரெட்டியார்புரம் மக்கள் கடந்த 40 நாட்களுக்கு மேலாக அமைதியாக மரத்தடி நிழலில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 24ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 20ஆயிரத்துகும் அதிகமானோர் பங்கேற்றனர்.இதனால் தூத்துக்குடியே ஸ்தம்பித்தது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் இந்திய வாலிபர் சங்கம் சார்பில் மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கல்லூரி முன்பு மாணவர்கள் திரண்டுள்ளனர்.