தமிழ்நாடு

கண் பார்வையற்றோருக்காக கண்ணாடி கண்டுபிடித்த அரசு பள்ளி மாணவர்கள்! நெகிழ்ந்த நாகை ஆட்சியர்

webteam

நாகை நாலுகால் மண்டபம் அருகே செயல்பட்டு வரும் தேசிய மேல்நிலைபள்ளிக்கு கண் பார்வையற்றவர்கள் சிலர் அகர்பத்திகள் விற்பனை செய்ய வந்து செல்வது வழக்கம். அப்போது அவர்கள் பள்ளி படிக்கட்டுகள், வகுப்பு நாற்காலிகள் ஆகியவற்றில் தடுமாறி மோதியுள்ளனர். இதைப்பார்த்த அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அப்சல்முகமது, சபரிவாசன் ஆகியோர், அவர்களுக்கு ஏதாவது உதவிசெய்ய வேண்டுமென்று நினைத்துள்ளனர்.

அந்த உதவி, அவர்களுக்கான நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்துள்ளனர் இருவரும். அப்போதுதான் அவர்களுக்கு `கண் பார்வையற்றவர்கள் பாதிப்பு இல்லாமல் வந்து செல்ல வழிவகை செய்யவேண்டும்’ என்ற எண்ணம் எழுத்துள்ளது. அதை செயல்படுத்தும் விதமாக, சென்சார் மற்றும் ஸ்பீக்கர் பொருத்தப்பட்ட பிரத்யேக கண்ணாடி ஒன்றை தயார் செய்தது சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர் இம்மாணவர்கள்.

அதோடு நிற்காமல், தொடர்ந்து அன்னை சத்தியா குழந்தைகள் இல்ல வளாகத்தில் இயங்கி வரும் அனுபவம் மூத்த குடிமக்களுக்கான இல்லத்தில்  தங்கியுள்ள கண் பார்வை குறைபாடு மற்றும் பார்வையற்றவர்களுக்கு கண்ணாடி கொடுத்துள்ளனர். இதைப் பயன்படுத்திய அவர்கள் அக்கண்ணாடி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், ஆனால் சற்று கனமாக இருப்பதாகவும் மாணவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கண்ணாடி தொடர்பான செயல்முறை விளக்கத்தை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் மாணவர்கள் செய்து காட்டினர். இதில் ஆச்சரியமடைந்த ஆட்சியர் கண்ணாடியை தானே அணிந்து கொண்டு பரிசோதித்தார். அவரின் முன் யாராவது கையை கொண்டு வந்தால், அப்போது கண்ணாடி எச்சரிக்கை ஓசை எழுப்பியது. மாணவர்களின் அசாத்திய கண்டுபிடிப்பால், ஆட்சியர் வியந்தார்! இதனையடுத்து மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து அவர் பாராட்டியதோடு, சமூக சிந்தனையோடு முயற்சி எடுத்துள்ள மாணவர்களை பெரிதும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதுதொடர்பாக மாணவர்களிடம் நாம் பேசினோம். அப்போது “எங்கள் பள்ளிக்கு அகர்பத்தி விற்பனை செய்ய வரும் கண் பார்வையற்றவர்கள் பல இடையூறுகளை சந்திக்கின்றனர். அவர்கள் வெளியே இடையூறு இல்லாமல் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் எழுந்தது. இதற்காக பிரத்யேக கண்ணாடி தயார் செய்தோம். அந்தக் கண்ணாடியில் சென்சார் மற்றும் ஸ்பீக்கர் பொருத்தியுள்ளோம். கண் பார்வையற்றவர்கள் கண்ணாடியை போட்டுக் கொண்டு வெளியே செல்லும் போது, சென்சாரில் வெளிப்படும் சிக்னல் எதிரில் இருக்கும் பொருள் மீது பட்டவுடன் ஸ்பீக்கரில் ஒலியை எழுப்பும்.

இதைக் கொண்டு கண் பார்வையற்றவர்கள் நிதானித்து கொண்டு விலகி செல்ல முடியும்.கண் பார்வையற்றவர்களில், காதுகேளாதவர்களும் உள்ளனர். எனவே அவர்களும் பயன்படுத்தும் வகையில் ஒலி எழுப்புவதற்கு பதிலாக வைபேரேசன் மூலம் உணரும் வகையிலும், கனம் குறைவாகவும் கண்ணாடியை வடிமைக்கப்போகிறோம்” என்ற இந்த இளம் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.