தமிழ்நாடு

கல்லூரிகளில் ஜனநாயக அரசியல் விழிப்புணர்வு பாடம் அவசியம் - பாடம் நாராயணன்

கல்லூரிகளில் ஜனநாயக அரசியல் விழிப்புணர்வு பாடம் அவசியம் - பாடம் நாராயணன்

rajakannan

கல்லூரிகளில் மாணவர் சங்க தேர்தலுக்கு இடமளிக்க வேண்டுமென்று சமூகநல ஆர்வலர் பாடம் நாராயணன் வலியுறுத்தியுள்ளார்.

கல்லூரி வளாகங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் மஞ்சுளா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அரசியல் விவாதங்கள் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்பதால் அவற்றை அனுமதிக்கக்கூடாது என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் இந்த அறிவிப்பு குறித்து சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் புதிய தலைமுறையிடம் கூறுகையில், “அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் பேச்சுகளுக்கு தடை விதிக்கலாம். அதில் தவறில்லை. ஆனால், அரசியல் விழிப்புணர்வு குறித்த பாடம் நிச்சயம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இருக்க வேண்டும். அத்தகைய விழிப்புணர்வு இருக்கும் பட்சத்தில் மாணவர்களுக்கு சட்டபூர்வமாக எப்படி பிரச்னைகளை அணுகுவது என்பது குறித்து அறிவு கிடைக்கும். 

மாணவர்களிடையே இருக்கும் முக்கியமான பிரச்னை, ஜனநாயக ரீதியிலான அரசியலை முன்னெடுப்பதா அல்லது வன்முறை அரசியலை தேர்ந்தெடுப்பதா என்பதுதான். அரசியல் விழிப்புணர்வு இல்லாததால் தான் மாணவர்கள் வன்முறை அரசியலை கையிலெடுக்கிறார்கள். கல்லூரிகளைப் பொறுத்தவரை மாணவர் சங்க தேர்தல்களுக்கு இடமளிக்க வேண்டும். அதேபோல், மாணவர் சங்கங்களை வைத்துக் கொள்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். அப்படி இருப்பது ஆரோக்கியமானதாக இருக்கும்” என்றார்.