ஆற்காட்டில் மருத்துவர்கள் காவல்துறையினர் தூய்மைப் பணியாளர்கள் என மூன்று உருவங்களின் பாதுகாப்பில் கொரோனா ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு ஓவியத்தை மாணவர்கள் வரைந்துள்ளனர்.
கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில், தமிழகத்தில் கொரோனா குறித்த நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வீட்டிலேயே இருக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறது.
அரசுடன் இணைந்து மருத்துவர்கள், காவலர்கள், சுகாதார துறை ஊழியர்கள் ஆகியோர் இரவு பகல் பாராமல் தன்னலமின்றி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை கெளரவிக்கும் வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு லதா கலைக் கூட மாணவர்களான முத்து மற்றும் கிஷோர் ஆகிய இருவரும் இணைந்து, இவர்கள் மூன்று பேரையும் இணைத்து ஓவியம் ஒன்றை வரைந்துள்ளனர்.
இந்த ஓவியம் பத்து அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 10 கிலோ கலர் கோலமாவு கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஓவியம் தற்போது அனைவரையும் கவர்ந்திருக்கிறது. இவர்கள் முன்னதாக நாடாளுமன்றம் சட்டமன்ற தேர்தலின்போது, 100 சதவிதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி மணல் சிற்பத்தையும், ஒரு லட்சம் சதுர அடியில் குடிநீர் சேகரிப்பின் அவசியத்தை பற்றியும் விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்தது குறிப்பிடத்தக்கது.