வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் பிரதமரின் உரையை பார்க்க வேண்டுமென விருப்பப்பட்டால் பள்ளிகளில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றே பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் கொடுத்துள்ளார்.
பொதுத்தேர்வை மாணவர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்வது குறித்து வரும் 16-ஆம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சி, தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி மூலம் நேரடியாக ஒளிப்பரப்படவுள்ளது. இதனை மாணவர்கள் காணும் வகையில் பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்வதற்கு சுற்றறிக்கை அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே பிரதமர் மோடியின் உரையை பார்க்க வரும் 16-ஆம் தேதி பள்ளி மாணவர்கள் கட்டாயமாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று ஒரு தகவல் பரவியது. இதனையடுத்து அதற்கு மறுப்பு தெரிவித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய தலைமுறைக்கு விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் உரையை பார்க்க வேண்டுமென விருப்பப்பட்டால் பள்ளிகளில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றே பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது கட்டாயம் அல்ல.” என தெரிவித்துள்ளார்.