தமிழ்நாடு

மந்தைவெளி - பாரிமுனை பேருந்தில் நடத்துனரை வெளியே தள்ளிய 4 மாணவர்கள் கைது

நிவேதா ஜெகராஜா

பேருந்து நடத்துனரை பேருந்தில் இருந்து தள்ளிய கல்லூரி மாணவர்கள் 4 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.

சென்னை மந்தைவெளியில் இருந்து பாரிமுனை நோக்கி சென்ற (தடம் எண் 21) பேருந்தில் நேற்று புதுக்கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்ததுடன் தாளம் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். அப்போது பேருந்து ஓட்டுனர் ஊரப்பாக்கத்தை சேர்ந்த சங்கர் என்பவர் அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்களை கண்டித்துள்ளார். மாணவர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்ததால் ஓட்டுனர் சங்கர் பேருந்தை பல்லவன் சாலையில் உள்ள பணிமனைக்குள் நிறுத்தினார்.

உடனே புதுக்கல்லூரி மாணவர்கள் சிலர் எதற்காக பேருந்தை பணிமனைக்குள் நிறுத்தினாய் என கேட்டு நடத்துனர் ஜெரினுடன் தகராறில் ஈடுபட்டனர். இதனை தடுக்க வந்த ஓட்டுநர் சங்கரை திடீரென மாணவர்கள் சிலர் பேருந்திலிருந்து கீழே தள்ளியதால் தலையில் காயம் ஏற்பட்டது. உடனே பயணிகள் மாணவர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் தப்பி ஓடி சென்றனர். தப்பி சென்ற மாணவர்களை விரட்டி பிடிக்க முயன்ற பணிமனையில் இருந்த நடத்துனர் அருண்குமார் தவறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. பின்னர் காயமடைந்த ஓட்டுநர் சங்கர் இது குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் ஓட்டுநரை தாக்கிய புதுக்கல்லூரி மாணவர்கள் கொரட்டூரைச் சேர்ந்த லோகேஷ் (18) பி.ஏ தமிழ் முதலாம் ஆண்டு, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சுதேல்(18) பி.ஏ தமிழ் முதலாம் ஆண்டு, கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ரேணி(18) பி.ஏ வரலாறு முதலாம் ஆண்டு, எண்ணூரைச் சேர்ந்த அப்துல்லத்தீப்(19) பிஎஸ்சி 3 ஆம் ஆண்டு ஆகிய 4 மாணவர்களை கைது செய்தனர்.