தருமபுரியில் பள்ளி முடிந்து வந்த மாணவனை திரைப்பட பாணியில் ஆட்டோவில் கடத்தி சென்று ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி காந்திநகரை சேர்ந்தவர் ராஜா. இவர் சேலம் மேச்சேரியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் செயல் அலுவலராகப் பணியாற்றி வருகிறார். ராஜாவின் மகன் பிரகதீஷ்வரன் (14), தருமபுரியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வெகுநேரம் ஆகியும், பிரகதீஷ்வரன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவனை காவில்லை என பல இடங்களில் தேடியுள்ளனர்.
இதனிடையே, ராஜாவிற்கு போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர், மகனை கடத்தி விட்டதாகவும், ரூ.50 லட்சம் பணம் கொடுத்தால் விடுவதாகவும், யாரிடமாவது தெரிவித்தால், பையனை கொன்றுவிடுவேன் எனக் கூறியுள்ளார்.
ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டும் ஆடியோ
“கடத்தல்காரர்: ராஜாவா?
சிறுவனின் தந்தை: ஆமாங்க.
கடத்தல்காரர்: உங்க பையன் என்கூடத்தான் இருக்கான்.
சிறுவனின் தந்தை: யார் நீங்க?
கடத்தல்காரர்: நீ எதுவும் பேசாத அமைதியா நா சொல்றத மட்டும் செய்.
கடத்தல்காரர்: இரவு 12 மணிக்கு கூப்பிடுறேன். போலீஸுக்கு போகாத, உன் பையன் இருக்க மாட்டான்
சிறுவனின் தந்தை: நீங்க யாருங்க?
கடத்தல்காரர்: எனக்கு அதிகம் வேண்டாம் ரூ.50 லட்சம் போதும்
சிறுவனின் தந்தை: ரூ.50 லட்சமா? நீங்க யாரு? எங்க இருக்கீங்க?
கடத்தல்காரர்: நா அப்புறமா கூப்பிடுறேன்”
இதை தொடர்ந்து ராஜா தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நகர காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் செல்போன் நம்பரை வைத்து விசாரணை மேற்கொண்டார். இதனிடையே, கடத்தியவரிடம் இருந்து தப்பித்த பிரகதீஷ்வரன், நடந்தவற்றை தனது தந்தையிடமும், போலீசிடமும் கூறியுள்ளான்.
பிரகதீஷ்வரன் பள்ளி முடிந்து வெளியில் வந்துள்ளான். பள்ளிக்கு வெளியில் காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், ‘நீ ராஜாவின் மகன் தானே, உங்கள் உறவினருக்கு உடல் நிலை சரியில்லை. அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். உன்னை உங்க அப்பா அழைத்து வர சொன்னார்’ என அந்த மாணவன் பிரகதீஷ்வரனிடம் கூறியுள்ளார். பின்னர், பிரகதீஷ்வரனை ஆட்டோவில் ஏற்றி கொண்டு அந்த நபர் சென்றுள்ளார்.
குறிப்பிட்ட அந்த மருத்துவமனையை தாண்டியது சந்தேகமடைந்த பிரகதீஷ்வரன், அப்பாவுக்கு போன் பண்ணுங்க எனத் தெரிவித்துள்ளான். ஆனால் ஆட்டோ ஓட்டுநர் போன் எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், வேறு மருத்துவமனை எனக் கூறி, வத்தல்மலை அருகில் ஆட்டோ ஓட்டுநர் அழைத்து சென்றுள்ளார். தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் மாற்றி மாற்றி பேசியதில் சந்தேகமடைந்த சிறுவன், வெங்கட்டம்பட்டி அருகே ஆட்டோவிலிருந்து தப்பித்துள்ளான்.
ஆட்டோவில் இருந்து தப்பித்த பிரகதீஷ்வரன் அருகில் உள்ள தேவராஜ் என்பவரின் வீட்டிற்குள் தஞ்சமடைந்துள்ளான். நடந்தவற்றையெல்லாம் தேவராஜிடம் தெரிவித்துள்ளான். பின்னர், அவரின் போனை வாங்கி தந்தை ராஜாவுக்கு தகவல் தெரிவித்துள்ளான். இதனையடுத்து காவல்துறை மாணவன் பிரகதீஷ்வரனை மீட்டனர். இதை தொடர்ந்து செல்போன் நம்பரை வைத்து சிறுவனை கடத்தி சென்ற ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் என்பவரை தருமபுரி நகர காவல் துறையினர் இன்று கைது செய்தனர்.
மேலும் இந்தக் கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா எனக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில், மாணவன் பிரகதீஷ்வரனுக்கு இப்படி துரதிருஷ்டமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.