தமிழ்நாடு

‘ஆபாச வார்த்தைகள் பேசி அத்துமீறினார்’: மாணவி புகார்.. பேராசிரியர் தலைமறைவு

‘ஆபாச வார்த்தைகள் பேசி அத்துமீறினார்’: மாணவி புகார்.. பேராசிரியர் தலைமறைவு

webteam

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ஜெயச்சந்திரன் என்பவர் மீது பி.எச்.டி படிக்கும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயிரி தகவலியல் துறையில் ஆராய்ச்சி மாணவியாக ஒருவர் படித்து வருகிறார். இவரது ஆய்வு நெறியாளராக உதவிப்பேராசிரியர் ஜெயசந்திரன் என்பவர் இருந்தார். இவர் தன்னுடைய மனைவிக்கு முதுகு தண்டுவடம் தேய்மானம் அடைந்ததால் இல்லற வாழ்வில் ஈடுபட முடியவில்லை என்று கூறி, மாணவியின் கையை பிடித்து இழுத்ததோடு மட்டுமல்லாமல், ஆபாச வார்த்தைகளை பேசி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவி தரப்பில் புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவி கடந்த 25ஆம் தேதி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தி, அவருடைய ஆய்வு நெறியாளரை மாற்றி தருவதாக தெரிவித்திருக்கிறது. அதேசமயம் பேராசிரியர் ஜெயச்சந்திரனின் மனைவி அனுஷ்யா தேவியும் அதே பல்கலைக்கழகத்தில் தான் பணியாற்றி வருகிறார் என்பதால், மற்ற ஆசிரியர்கள் தன்னை ஆய்வு மாணவியாக சேர்த்துக்கொள்ள தயக்கம் காட்டுவதாக அம்மாணவி கூறியிருக்கிறார்.

இதனையடுத்து தனக்கு உரிய கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மாணவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், காவல்துறையினரும், பல்கலைக்கழக நிர்வாகமும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதற்கிடையே பேராசிரியர் ஜெயச்சந்திரன் தலைமறைவாகியுள்ளார்.