தொட்டியம் காவல் நிலையம் கோப்புப்படம்
தமிழ்நாடு

திருச்சி: மாணவனை அடித்து கையை உடைத்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்... தொட்டியத்தில் பரபரப்பு!

திருச்சி அருகே அரசு பள்ளி மாணவனை அடித்து கையை உடைத்து தலைமை ஆசிரியர் குறித்து, பெற்றோர்கள் தொட்டியம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

சண்முகப் பிரியா . செ

செய்தியாளர் : S. சந்திரன்

திருச்சி மாவட்டம் தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பாபட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவன் ஜெகன் (15) என்பவர் பள்ளி வளாகத்தின் மாடியில் உள்ள பள்ளி வகுப்பறையை கூட்டியுள்ளார்.

தொட்டியம் காவல் நிலையம்

அப்பொழுது துடைப்பம் தவறுதலாக மாடியில் இருந்து கீழ் பகுதியில் நின்றுகொண்டிருந்த பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன் காரின் மீது விழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தலைமையாசிரியர் மாடியில் உள்ள வகுப்பறைக்கு சென்று “இச்செயலைச் செய்தது யார்?” என கேட்டு விசாரித்துள்ளார். மாணவன் ஜெகன் தவறுதலாக மாடியில் இருந்து கைதவறிக் கீழே போட்டதாகக் கூறியுள்ளார்.

ஆனால் இதைக்கேட்ட பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன் மாணவன் ஜெகனை சரமாரியாக அடித்துள்ளார். இதில் மாணவன் ஜெகனுக்கு கையில் எலும்பு ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டதோடு உடலில் பல பாகங்களில் காயமும் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது குறித்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் மாணவனின் நிலையைக் கண்டு அவரைத் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு சிக்கிச்சைக்காகக் கூட்டிச் சென்றுள்ளனர்.

கோப்புப்படம்

அங்கு அவருக்கு கையில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவரவே அவரை முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மாணவன் மற்றும் அவரது பெற்றோர்கள் பள்ளி தலைமையாசிரியர் மீது தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் கதிரேசன் தலைமை ஆசிரியர் சந்திரமோகனை விசாரித்து வருகிறார். மாணவன் தூய்மை பணி செய்தது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.