மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தனியார் செங்கல் சூளையில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த கூலித் தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து ஐந்தாவது நாளாக ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 17ஆம் தேதி சீர்காழி அருகேயுள்ள நெப்பத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணிபுரிந்த தொழிலாளி சீனிவாசன் என்பவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி 10மணி நேரம் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அதன்பிறகு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தார்கள். இந்நிலையில் அவரது உடலை கூறாய்வு செய்யக்கூடாது என கடந்த நான்கு நாட்களாக தடுத்து வைத்திருந்தார்கள். ஆனால் நேற்று உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
இருந்தபோதிலும் சீனிவாசனின் உடலை பெறமுடியாது, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். உடற்கூறாய்வு அறிக்கையை தங்களிடம் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேருந்து நிலையம் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.