திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டினர் அடைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் இருந்து தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, இலங்கை தமிழர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மத்தியச் சிறையில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில், தண்டனை காலம் முடிந்தும் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் 80 பேர் தங்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சிலர், விடுதலை வேண்டி, வயிற்றை கத்தியால் அறுத்துக் கொண்டும், தூக்க மாத்திரை சாப்பிட்டும் தற்கொலை முயற்சி போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்தே, பேச்சுவார்த்தையாவும் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் எவ்வித தீர்வும் எட்டப்படாததால் விரக்தியடைந்த முகாம்வாசிகளில் இருவர் நேற்று முன்தினம் கத்தியால் தங்களது கழுத்து மற்றும் வயிற்றை கிழித்துக்கொண்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் சிலர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இவர்களை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பதற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம், 16 பேர் தற்கொலை முயற்சியினால் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களைத்தொடர்ந்து இன்று மேலும் 12 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
அனைவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இலங்கை தமிழர்கள் அனைவரும் உணவு உண்ண மறுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்களில் 10வது நாளாக முகாமில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிரூபன், முகுந்தன் இருவரின் உடல் நிலையையும் மருத்துவக் குழுவினர் இன்று சோதனை செய்தனர். அவர்களின் இதயத் துடிப்பு, 50க்கும் கீழாக குறைந்த நிலையில், இருவரும் கோமா நிலைக்கு செல்லும் அபாயம் இருந்தது. இருப்பினும் அவர்கள் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டனர்.
அதையடுத்து, காவல்துறையின் உதவியுடன் இருவரும் வலுக்கட்டாயமாக அங்கிருந்து தூக்கப்பட்டனர். தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு சென்றாலும், 'விடுதலை அல்லது சாகும் வரை உண்ணாவிரதம் என்பதே தங்களது நிலைப்பாடு' என்பதில் இருவரும் உறுதியாக இருக்கின்றனர்.