தமிழ்நாடு

“அதிகார துஷ்பிரயோகம் செய்தால் கடும் நடவடிக்கை” - தேர்தல் ஆணையம்

“அதிகார துஷ்பிரயோகம் செய்தால் கடும் நடவடிக்கை” - தேர்தல் ஆணையம்

webteam

தேர்தல் பணியிலுள்ள அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்ளிட்டவை தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். சென்னை கிண்டியில் நடைபெற்ற ஆலோசனையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், வருமானவரித்துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, பணப் பட்டுவாடாவில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட வேண்டும் எனப் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்ததாக கூறினார். இதுதொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ.127 கோடி கைப்பற்றப்பட்டு உள்ளதாக கூறிய அவர், ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் அந்தப் பணம் உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்படும் எனக் கூறினார். 

ரஃபேல் புத்தகம் வெளியீடு பிரச்சனை தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், தரப்படும் அறிக்கை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் தேர்தல் பணியிலுள்ள அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.