தமிழ்நாடு

"தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" -ஆவடி காவல் ஆணையர்

sharpana

தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் எச்சரிக்கை செய்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆவடி காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்று ஆய்வு செய்தார். அதில் ஆவடி, திருமுல்லைவாயல் அமைந்துள்ள 15 வாக்கு சாவடிகள் மற்றும் முக்கிய வாக்கு சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களின் வாக்குகளை சுதந்திரமாகவும், மற்றும் நம்பிக்கை ஊட்டும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

வாக்குச் சாவடிகளில் ஆய்வு செய்த போது பாதுகாப்பு பணியிலுள்ள காவல் துறையினருடன் ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்துரையாடினார். மேலும் அலுவலர்கள் மற்றும் வாக்காளர்களிடம் ஆவடி காவல் ஆணையாளர் கலந்துரையாடினார். தடையில்லா மின்சாரம், வாக்கு சாவடிகளில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் மற்றும் நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்தல் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.