தமிழ்நாடு

குற்றச்செயலில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை: மதுரை காவல் ஆணையர் எச்சரிக்கை

kaleelrahman

குற்றச்செயலில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில், மதுரை மாநகரில் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 144 ரவுடிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குற்ற பின்னணி உடைய நபர்கள் மற்றும் ரவுடிகள் 232 பேர் மீது பிரிவு 110 படி நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டுள்ளது. நன்னடத்தை காலத்தில் நன்னடத்தை விதிமுறைகளை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட 23 பேர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த மாதத்தில் ரவுடிகளான முருகன் என்ற லோடு முருகன், காளீஸ்வரன் என்ற கிளாமர் காளி, கண்ணன் என்ற குட்டை கண்ணன், கணக்கன் என்ற முனியசாமி, முத்துராமலிங்கம் என்ற குரங்கு முத்துராமலிங்கம் மற்றும் காளீஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

கடந்த ஜீலை மாதத்தில் 7 ரவுடிகள் உட்பட 2021-ஆம் வருடத்தில் 44 நபர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மாதத்தில் 52.435 கிலோ கஞ்சா உட்பட இந்த வருடத்தில் இதுவரை 771.470 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் 32 காவலர்கள் ஆயுதத்துடன் ரோந்து பணியில் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரோந்து காவலர்களுக்கு நவீன பாடி ஒன் கேமராஸ் வழங்கப்பட்டு அதன் மூலம் ரவுடிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாநகரில் ரவுடிகள் மற்றும் குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்கா எச்சரித்துள்ளார்.