கொழும்பு விமான நிலையம் pt web
தமிழ்நாடு

150 தமிழர்கள் சிக்கித் தவிப்பு., ”இலங்கை அரசு எந்த உதவியும் செய்யவில்லை” - தமிழக பயணி குற்றச்சாட்டு!

150 தமிழர்கள் உட்பட 300 பேர் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வரும் நிலையில், உணவு முதல் அத்தியாவசிய தேவைகள் வரை எதையுமே இலங்கை அரசு செய்யவில்லை என விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் ஞானியார் என்பவர் தெரிவித்துள்ளார்.

PT WEB

இலங்கையில் நிலவிவரும் மோசமான வானிலை காரணமாக கடந்த சில தினங்களாக விமானசேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தசூழலில், துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வரவிருந்த 150 தமிழர்கள் உட்பட 300 பேர் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தில் சிக்கித்தவித்து வருகின்றனர். டிட்வா புயல் காரணமாக சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படாததால் 3 நாட்களாக உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.

இலங்கை விமான நிலையத்தில் 150 தமிழர்கள் சிக்கித் தவிப்பு

இதையடுத்து, இலங்கையில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இலங்கையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பலரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை விமான நிலையத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழகப் பயணி ஞானியார் என்பவர் புதியதலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், துபாயில் இருந்து கொழும்பு வந்தோம். அப்போது, டிட்வா புயல் காரணமாக அங்கிருந்து, எங்களை ராஜபக்சே விமான நிலையத்திற்கு மாற்றியிருக்கிறார்கள். நேற்றிலிருந்து, இந்தியாவிற்கு வரும் எந்த விமானமும் புறப்படவில்லை. ஆனால், ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு விமானங்கள் சென்று கொண்டிருக்கின்றன.

ஏர்போட்டில் இருந்து எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. உணவு கூட சரியாக கொடுக்கப்படவில்லை. குழந்தைகள், பெரியவர்கள் என நிறைய பேர் தூங்காமல், உணவு இல்லாமல் மூன்று நாட்களாக இருக்கின்றனர். ஒருவர் கூட தரையில் கூட அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், அவரையும் கூட யாரும் கண்டுகொள்ளவில்லை.

இதுவரை, இந்திய தூதரகத்திலிருந்தும் எங்களுக்கு இன்னும் உதவி கிடைக்கவில்லை. இந்திய தூதரகத்திலிருந்து யாரவது வந்து இங்கு இருக்கும் பயணிகளை ஒருங்கிணைத்து உதவி செய்தால் நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.