இந்தி திணிப்புக்கு எதிராக ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.
பாரதிய ஜனதா கட்சி 2014 இல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்ததும், புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்திட மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில், மத்திய அரசின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2016 இல் தனது வரைவு அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்தது. இதன்படி புதிய கல்விக் கொள்கையில் பல மாற்றங்களை புகுத்துவதற்கான பரிந்துரைகள் செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு 2018 டிசம்பர் 15 ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை தயார் ஆகிவிட்டதாகவும், எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என்றும் அறிவித்தார்.
தற்போது மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்திய அரசு ஆட்சி பொறுப்பேற்றவுடன், கஸ்தூரி ரங்கன் குழு தேசியக் கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் நேற்று ஒப்படைத்துள்ளது.
இந்நிலையில் மாநிலக் கல்விகளில் ஆங்கிலம், மற்றும் தாய் மொழியை பயிற்றுவிக்கும் வகையிலுள்ள இருமொழிக் கொள்கைக்குப் பதிலாக மூன்று மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படலாம் எனச் சர்ச்சை எழுந்து வருகிறது. இதற்கான அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை விரைவில் அறிவிக்கலாம் என்றும் தெரிகிறது.
இந்தக் குழப்பங்களுக்கு விடையளிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய தலைமுறைக்கு தொலைபேசி மூலமாக சில விளக்கங்களை அளித்திருந்தார். அப்போது, இருமொழிக் கொள்கையே தமிழகத்தில் தொடரும் என்றும் இருமொழிக் கொள்கையைதான் தொடர முடியும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் கூட மக்கள் மீது எந்த மொழியையும் திணிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் நான் இந்தி படத்தில் நடித்தவன். விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையும் கற்கலாம். தமிழர்கள் இன்னொரு மொழியை ஏற்பது கடினம். இந்தி திணிப்புக் கூடாது என ஏற்கெனவே அழுத்தி கூறியுள்ளோம் என்று தெரிவித்திருந்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டிருந்த அறிக்கையில், “புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டால், இந்தித் திணிப்பை எதிர்த்து 1965 மொழிப் போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் என்பதை இந்தி எதிர்ப்புப் போரில் களம் கண்டவன் என்ற முறையில் எச்சரிக்கிறேன்” என்று கண்டித்திருந்தார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. #StopHindiImposition, #TNAgainstHindiImposition ஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகளும் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளன. இதற்கு ஒருபடி மேலாக சென்று #StopHindiImposition உலக அளவில் ட்ரெண்டிங்கில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.