தமிழ்நாடு

‘பேனர்கள் வைப்பதை நிறுத்த வேண்டும்’ - அதிமுக தலைமை அறிவிப்பு

‘பேனர்கள் வைப்பதை நிறுத்த வேண்டும்’ - அதிமுக தலைமை அறிவிப்பு

Rasus

மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்கள் வைப்பதை நிறுத்த வேண்டும் என அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்நிலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்கள் வைப்பதை நிறுத்த வேண்டும் என அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். கட்சி, இல்ல நிகழ்ச்சிகளில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்க வேண்டாம் என அதிமுக கேட்டுக் கொண்டுள்ளது. ஆர்வ மிகுதியால், விளைவுகளை அறியாமல் சிலர் செய்யும் செயலால், மக்கள் பாதிக்கப்படும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது எனவும் அதிமுக தெரிவித்துள்ளது.

முன்னதாக, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கட்சி பேனர்கள் வைக்கக்கூடாது என தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.  அவ்வாறு பேனர் வைக்கப்படும் நிகழ்ச்சிகளில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.