மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம்,2 வாரங்களுக்குள் மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில், மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த தடை விதித்து மத்திய அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு சட்டம் இயற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டத்தை மீறி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கழிவு நீர் தொட்டியில் இறங்கி 30 பேர் பலியாகியுள்ளதாகவும், நகர்புறங்களில் 350-க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, மனித கழிவுகளை மனிதர்களே அகற்ற தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது மனித உரிமை மீறல் என தெரிவித்துள்ளது. இதற்கான தடை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றும், 2 வாரத்துக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.