அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் தனியார் விடுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.
தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுக்கு உணவு அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த விடுதியில் வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அதிமுகவினர் ஈடுபட்டிருக்கலாம் என்ற புகார் எழுந்தது.
இதுகுறித்து புதிய தலைமுறையிடம் தொலைபேசி வழியாக பேசிய அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம், கல்வீச்சு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், அதுபோன்ற சம்பவங்களில் அதிமுகவினர் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். அதேபோல, விடுதியில் யாருடைய கட்டாயத்தின் பேரிலும் தங்கவில்லை, சுதந்திரமாகவே தங்கியிருப்பதாகவும் தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்தார்.