வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் உடைத்தனர்.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒருசில பகுதிகளில் அரசின் கவனத்துடன் தற்காலிகமாக குறைந்தளவில் சில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை வேலூரில் இருந்து திருப்பதிச் சென்ற அரசுப் பேருந்து மீது வள்ளிமலை சந்திப்பு சாலையில், அடையாளம் தெரியாத நபர்களால் கல்வீசப்பட்டது.
இந்தக் கல்வீச்சால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்தது. அதனையடுத்து பேருந்து பாதியில் நிறுத்தப்பட்டு, தனியார் பேருந்தில் பயணிகள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநர் ஆதிகேசவன், நடத்துநர் முரளிதரன் ஆகியோர் காட்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரையடுத்து காவல் துறையினர், கல்வீச்சில் ஈடுபட்ட இருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். போதிய பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், அரசுப் பேருந்து மீது கல் வீசப்பட்டுள்ள சம்பவம் பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.