தமிழ்நாடு

போலீசில் புகார் அளித்ததால் காலில்விழ வற்புறுத்திய கொடுமை - விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்

kaleelrahman

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்ததற்காக ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியை காலில் விழவைத்து தண்டனை கொடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 15ஆவது வார்டு பெரும்பச்சேரி பகுதி, இப்பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி பெருமாள்சாமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், பெருமாள்சாமியின் மகன் கற்பக காளியப்பன். மாற்றுத் திறனாளியான இவர், தனது பகுதி மக்கள் படிப்பறிவு பெற வேண்டும் என்பதற்காக 'வா' திட்டம் என்ற பெயரில் இலவச அரசுத்தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.

இதே பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் குமரன் என்பவர் இலவச பயிற்சி அளிக்கும் கற்பக காளியப்பன் உடல் ஊனத்தை பற்றி கிண்டல் செய்ததாக கூறி வெற்றிவேல் குமரன் மீது நகர் காவல் நிலையத்தில் கற்பக காளியப்பன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நகர் காவல் நிலைய போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற மின்வாரிய அரசு ஊழியரான பெருமாள்சாமி தரப்பினரை ஊர் கூட்டத்திற்கு அழைத்த ஊர் நிர்வாகிகள் 'நீ ஊர் கட்டுப்பாடை மீறி காவல் நிலையம் சென்றதால் உன்னை ஊரைவிட்டு தள்ளி வைப்பதாகவும் உனக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்' என்று ஊர் நாட்டாமை வீராச்சாமி சொல்லி எச்சரித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊர் கூட்டத்தில் கலந்து கொண்ட பெருமாள்சாமியிடம் 25000 கட்ட வேண்டும் என்றும் அதைக்கட்ட முடியாவிட்டால் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்றும் காலில் விழுந்தால் அபராத தொகை குறைவு என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து புரட்டாசி பொங்கல் நடக்கும் மண்டபத்திற்கு பெருமாள்சாமி வரவழைக்கப்பட்டு காலில் விழ வற்புறுத்தியதாக வீடியோ வெளியானது.

மேலும் இதை எதிர்க்கும் விதமாக மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடும் கூச்சல் குழப்பம் நிலவுவது போன்ற வீடியோ படக் காட்சிகள் வெளியாகின. இதனையடுத்து சொந்த ஊரிலேயே யாரிடமும் பேசக்கூடாது, பழகக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதித்து ஊரைவிட்டு தள்ளி வைத்திருப்பதோடு தன்னை அவமானப் படுத்தியதால் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியான பெருமாள்சாமி தெரிவித்தார்.