தமிழ்நாடு

தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள்..!

தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள்..!

Rasus

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள், 144 தடை உத்தரவையும் மீறி ஆட்சியர் அலவலகத்திற்குள் நுழைந்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ள நிலையில்,  போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை இன்று தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி ஏற்கெனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கட்டுள்ள நிலையில் இன்றும் ஏராளமான போராட்டக்காரர்கள் தடை உத்தரவையும் மீறி ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் தடை உத்தரவையும் பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய பார்த்தனர். அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்தனர். ஆனால் தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதன் காரணமாக போலீஸார் போராட்டக்காரர்கள் மீது தடியடியும் நடத்தினர்.

இதனிடையே ஆட்சியர் அவலுவலக வாயிலில் நின்று கொண்டிருந்த போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் தூத்துக்குடியில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு மற்ற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.