தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு - வேதாந்தா நிறுவனம் கோரிக்கை நிராகரிப்பு

webteam

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வேதாந்தா நிறுவனம் இன்று உச்சநீதிமன்றத்தில் முறையீடு ஒன்றினை வைத்தது. அதில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு கிடக்கிறது. எனவே இது சம்பந்தமான வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து தொடர்ந்து விசாரிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

இதைக்கேட்ட உச்சநீதிமன்றம் அந்த கோரிக்கை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் வழக்கமான விசாரணை பட்டியல் வரும்போதுதான் விசாரிக்க முடியும் எனவும் தற்போது இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தேவையில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அதிக மாசு ஏற்படுத்துவதாககூறி தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அந்த நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவின் விசாரணை நிலுவலையில் இருந்து வருகிறது.