தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சித்தரஞ்சன் மோகன்தாஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் தூத்துக்குடி சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய குழுவினர், துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியில் ஆய்வு நடத்தினர். வன்முறையில் பாதிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து, மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். இதனிடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நாளை தூத்துக்குடி வருகின்றனர்.