தூத்துக்குடி போராட்டத்தில் உயிரிழந்த 13 பேரில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டினால் உயிரிழக்கவில்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் பாஸ்கரன், டீக்காராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் அத்தனை வழக்குகளையும் ஒரே நாளில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றார். குற்றவியல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் 7 பேரின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மாஜிஸ்திரேட் அறிக்கை கிடைத்தவுடன் அதனை சீலிட்ட கவரில் தாக்கல் செய்வதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
5 பேரின் உடலை கேட்டு உறவினர்கள் கடிதம் கொடுத்துள்ளதாக கூறிய அரசு வழக்கறிஞர், இறந்தவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்றார். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பரிந்துரைக்கும் மருத்துவர்களை உடற்கூராய்வின் போது அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோரினார். உயிரிழந்த தமிழரசன், மணிகண்டன், ஆண்டனி, செல்வராஜ், ஸ்னோலின் ஆகியோரின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய வேண்டுமென உறவினர்கள் முறையீடு செய்தனர். துப்பாக்கிச்சூட்டினால் தான் உயிரிழந்துள்ளனர் என்று தெரியும் போது மறு உடற்கூராய்வு தேவையில்லை என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.