தூத்துக்குடியில் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி இரவு நேரங்களில் நடைபெறும் கைது நடவடிக்கைகளைத் தடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிப்காட், வடபாகம், தென்பாகம் உள்ளிட்ட 5 காவல்நிலையங்களில் 15ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மீளவிட்டான் மற்றும் தபால் தந்தி நகரைச் சேர்ந்த பாலசிங், பார்த்திபன், சந்தனமுத்து, சூசை அந்தோணிராஜ் உள்ளிட்ட 5 பேரை நேற்றிரவு வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்தனர்.
போராட்டத்தில் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனக்கூறி கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்துள்ளனர். இரவு நேரங்களில் காவல்துறையினர் அத்துமீறி வீடுகளுக்குள் நுழைவதால், அச்சத்துடனே வாழ்வதாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஆட்சியரிடம் கண்ணீருடன் முறையிட்டனர். கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுவிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தென்பாகம் காவல்சரகத்தில் தாக்குதல் நடத்தியதாக நான்கு ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல அரசு பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதாக ஆயிரம் பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் பொதுவிநியோக அதிகாரி கோபால், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே வன்முறை தொடர்பான வழக்குகளில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது.