தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி அளித்தது யார் என்பது தொடர்பான ஆவணங்களை அளிக்க தமிழக காவல் துறைக்கு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி அளித்தது யார் என்பது தொடர்பான ஆவணங்களை அளிக்க தமிழக காவல் துறைக்கு சிபிஐ உத்தரவிட்டுள்ளது. யாருடைய உத்தரவின் பேரில் காவல்துறையினருக்கு 15 துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டன..? என்பது தொடர்பாக விளக்கங்களை அளிக்கவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினரிடம், காயமடைந்த 40-க்கும் அதிகமானோரிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு தமிழக அரசு தெரிவித்த காரணங்கள் ஏற்புடையவை அல்ல என்று கூறி, ஆலை இயங்குவதற்குத் தேவையான அனுமதியை மூன்று வார காலத்திற்குள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனையடுத்து பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் நடவடிக்கைகளில் வேதாந்தா நிறுவனம் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.