சிலை கடத்தல் தொடர்பான புகாரில் டி.வி.எஸ். குழும தலைவர் வேணு சீனிவாசன் உள்ளிட்ட மூவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004ஆம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டபோது புன்னை வனநாதர் சன்னதியில் உள்ள மயில் சிலை உள்ளிட்ட 3 சிலைகள் மாற்றப்பட்டதாகவும், முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள், முன்னாள் ஆணையர் தனபால், டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன், ஸ்தபதி முத்தைய்யா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ததால், நால்வரும் முன் ஜாமின் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், டி.வி.எஸ். குழுமத் தலைவர் வேணு சீனிவாசன், ஸ்தபதி முத்தையா, அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் ஆகியோருக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
சிலைகள் மாயமானதற்கு தான் பொறுப்பல்ல என்றும், அறநிலையத்துறை உயரதிகாரிகள் உத்தரவின் அடிப்படையிலே செயல்பட்டதாக திருமகள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், 2004 கும்பாபிஷேக ஆவணங்களை திருமகள்தான் அழித்தார் என மூன்று ஆணையர்கள் அளித்த வாக்குமூலம் தெளிவாக உள்ளதால், திருமகளின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.