தமிழ்நாடு

தலைமைச் செயலகம் முன் தீக்குளித்த நபரிடம் வீடியோ வாக்குமூலம் சேகரிப்பு

நிவேதா ஜெகராஜா

தலைமைச் செயலகம் முன்பு தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவள்ளுர் மாவட்டம் திருவிளாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 75). இவர் நேற்று தலைமைச் செயலகம் முன்பு தனக்குத் தானே பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பிரிவு போலீசார் தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றி இருந்தனர். பின் அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது 59 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஜார்ஜ்டவுன் 6-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சந்திரசேகர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்று தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் சந்திரசேகரிடம் வாக்குமூலம் பெற்றார். அவரின் வாக்குமூலம் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற பொன்னுசாமி அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு ரூ.14 லட்சத்தை கடனாக கொடுத்துள்ளார் என்றும், கடனை பெற்ற சுப்பிரமணி அதனை திருப்பித் தராமல் பொன்னுசாமியை இழுத்தடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பொன்னுசாமி பல முறை போலீசில் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.