தமிழ்நாடு

நீண்ட சட்ட போராட்டம் மூலம் மாநில உரிமைகள் மீட்கப்பட்டு இருக்கிறது: அற்புதம்மாள்

Veeramani

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தின் மூலம் விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலைக்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் வாழ்த்துக்களை பேரறிவாளனுக்கும் அவரது தாயாருக்கும் தெரிவித்து வந்தனர். பேரறிவாளனும் அரசியல் பிரமுகர்களை அடுத்தடுத்து சந்தித்து நன்றி தெரிவித்து வந்தார்.



இந்த நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தனது தாயாருடன் வந்த பேரறிவாளன் அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் பெரியார் படிப்பகத்தில் பேரறிவாளனின் விடுதலையை கேக் வெட்டி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கொண்டாடினர். இதனை தொடர்ந்து பேரறிவாளனுக்கு அவரது தாயார் அற்புதம்மாளுக்கும் திராவிடர் கழகத்தினர் சால்வையணிவித்து மரியாதை செய்தனர். இதனையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் பேரறிவாளன் அற்புதம்மாள் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அற்புதம்மாள் தனது நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது எனவும், அது மட்டுமின்றி மாநில உரிமைகள் மீட்கப்பட்டு இருக்கிறது எனவும் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய பேரறிவாளன் முப்பத்தி ஆறு ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது எனவும், தனது தாயின் சட்டப் போராட்டத்திற்கு உதவியாக இருந்த பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் கோவைக்கு வந்ததாக அவர் தெரிவித்தார்.