அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தை மேலும் எளிமைப்படுத்தியும், கட்டணங்களைக் குறைத்தும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் காலம் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விற்கப்பட்ட மனைகளின் அடிப்படையில் மனைப்பிரிவுகளை மூன்று வகைகளாகப் பிரித்து வரன்முறைப்படுத்தும் முறை நீக்கப்பட்டுள்ளது. இதனால், அனுமதியின்றி பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுகள் உள்ளது உள்ளபடியே வரன்முறை செய்யப்படும்.
ஒரு மனைப்பிரிவில் குறைந்தபட்சம் ஒரு மனை விற்கப்பட்டிருந்தால் கூட அந்த மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தப்படும். மேலும், மனைப்பிரிவில் உள்ள சாலைகள் உள்ளது உள்ளபடி நிலையில் வரன்முறைப்படுத்தப்படும். மேலும், தனி நபர்களால் வாங்கப்பட்ட மனையை வரன்முறைப்படுத்தும்போது திறந்தவெளி நில ஒப்படைப்பு விதிகளிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு வெளியே அமைந்துள்ள ஊரகப்பகுதிகளில் 1972ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதியிலிருந்து 2016ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி வரையும், சென்னை பெருநகரப் பகுதிக்கு வெளியே நகரப்பகுதிகளில் 1980ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல், 2016ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி வரை ஏற்படுத்தப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனை உட்பிரிவுகளில் அமைந்துள்ள மனைகளை வரன்முறைப்படுத்த இந்த திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வளர்ச்சிக் கட்டணத்தையும் குறைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் தற்போதுள்ள 600 ரூபாய் வளர்ச்சிக் கட்டணம் 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.