தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் விவகாரம்: நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் தேர்தல் ஆணையர்

webteam

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடத் தவறியதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையர் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 17, 19 ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு தரவில்லை என திமுக தொடர்ந்த வழக்கால் அறிவிப்பாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி பிறகு திமுக தொடர்ந்த வழக்கில், நவம்பர் 17 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும், செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் அறிவிப்பாணை வெளியிடவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதன்படி அறிவிப்பாணை வெளியிடாத மாநில தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராக மாநில தேர்தல் ஆணையர் பெரோஸ்கானுக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், தொகுதி மறுவரையறை பணிகள் முடியாததே உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க முடியாதததற்கு காரணம் என அவரது தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் ஏதும் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.