தமிழ்நாடு

நீர்நிலைகளை கண்காணிக்க வேண்டும் - 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

நீர்நிலைகளை கண்காணிக்க வேண்டும் - 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

webteam

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீர்நிலைகளை கண்காணிக்க 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி நள்ளிரவு கஜா புயல் நாகை - வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. அதில், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின.

மேலும் ஏராளமானோர் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு தரப்பினரிடம் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

 இதனால் டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூரில் இரவு முதல் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, போரூர், அண்ணாநகர், புரசைவாக்கம், அயனாவரம், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடர்கிறது. புயல் பாதித்த நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும் எனவும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதனையொட்டி கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நீர்நிலைகளை கண்காணிக்க 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது.