cm stalin, pm modi pt web
தமிழ்நாடு

'கோவை, மதுரை மெட்ரோ அவசியம்..' பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் !

கோயம்புத்தூருக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் சேவைக்கான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து, ஒப்புதல் அளிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

PT WEB

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மெட்ரோ ரயில் திட்டங்கள் தமிழ்நாட்டின் நகரமயமாக்கலுக்கு அவசியம் எனவும், இதற்கான நிலம் கிடைப்பதில் தடையிருக்காது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

கோயம்புத்தூருக்கும், மதுரைக்கும் மெட்ரோ ரயில் சேவைக்கான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து, ஒப்புதல் அளிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கிட வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”அதிக அளவிலான தனிநபர் வாகனங்களைக் கொண்டும், நாட்டிலேயே மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்கி வரும் நிலையில் பெருநகரங்களில், மெட்ரோ ரயில் போன்ற அதிக திறன்கொண்ட பொதுப் போக்குவரத்து மாற்றுகள் தேவைப்படுவதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்

தொடர்ந்து, 20 லட்சம் மக்கள்தொகை என்ற அளவுகோல் பின்பற்றப்பட்டிருந்தால், ஆக்ரா, இந்தூர் மற்றும் பாட்னா போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறியிருக்க வாய்ப்பில்லை என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிலம் கிடைப்பது தடையாக இருக்காது என்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என்றும் உறுதியளித்துள்ளார்.

ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் எழுப்பியுள்ள ஐயங்களுக்கு உரிய, விரிவான விளக்கங்களைச் சமர்ப்பிக்க சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைக்கு, தான் அறிவுறுத்தியுள்ளதாகவும் முதல்வர் கூறியுள்ளார். இத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்க தமது குழுவுடன் புதுடெல்லியில் பிரதமரைச் சந்திக்க தயாராக இருப்பதாகவும், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் தமிழ்நாட்டின் தொழில் துறை மற்றும் கலாசார மையத்தினை உள்ளடக்கியது என்பதைக் கருத்தில்கொண்டு பிரதமர் இதில் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

மெட்ரோ

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் தர மறுத்து அவற்றுக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) மறுப்புக் கடிதத்துடன் திருப்பி அனுப்பியிருந்தது. தொடர்ந்து, இந்த ஒப்புதல் மறுப்புக்கு இவ்விரு நகரங்களின் மக்கள்தொகை மற்றும் பொறியியல் சார்ந்த காரணங்களை சுட்டிக் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.