தமிழ்நாடு

ஊரடங்கு குறித்த உரிய முடிவினை காலதாமதமின்றி அறிவியுங்கள் : முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

webteam

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு குறித்த உரிய முடிவை இனியும் காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவியுங்கள் என முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி இன்று காலை அனைத்து முதலமைச்சர்களுடனும் காணொலியில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு குறித்த உரிய முடிவை முன்கூட்டியே அறிவியுங்கள் என ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் ஊரடங்கு குறித்த அறிவிப்பை இனியும் காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவியுங்கள். ஊரடங்கால் பாதிக்கப்படுவோரின் வாழ்வாதாரத்திற்கு தேவையானவற்றை உறுதி செய்ய வேண்டும். எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1 கோடியை அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

மக்கள் நலனுக்காகத்தான் தொகுதி மேம்பாட்டு நிதியை எம்.எல்.ஏக்கள் பயன்படுத்துகிறார்கள். எம்.எல்.ஏக்களின் தார்மீக உரிமையை தமிழக அரசு பறித்திருப்பது சரியல்ல. 

அரசின் கையில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் கோல்டன் ப்ரீயட்தான். அதை சரியாக பயன்படுத்தியாக வேண்டும். தனித்திருத்தல் மட்டும்தான் மக்களால் செய்ய முடிந்தது. மற்ற அனைத்தையும் அரசுதான் ஏற்று செய்ய வேண்டும். கொரோனா விவகாரத்தில் அரசுக்கு ஆலோசனை தர, ஒத்துழைக்க, உதவி வழங்க திமுக தயாராக உள்ளது. ” எனத் தெரிவித்துள்ளார்.