ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மனித குலத்தினைக் காத்திடும் மகத்தான தீர்ப்பு என திமுக் தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ள மகத்தான- மனிதகுலத்தினைக் காப்பாற்றிடும் தீர்ப்பாகும். சுற்றுப்புறச்சூழலுக்கும், தங்களின் பாதுகாப்பிற்கும் பேராபத்தாக இருந்த ஆலையை எதிர்த்து ஜனநாயக ரீதியில் போராடிய அப்பாவி மக்கள் மீது கண் மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 13 அப்பாவி உயிர்களை கொடூரமாகப் பறித்த அ.தி.மு.க. அரசின் மாபாதகச் செயலை தமிழக மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்.
அவர்கள் கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை நியாயம் கிடைக்காதது வேதனையளிக்கிறது. தாமதமாகும் நீதி, மறுக்கப்படும் நீதி ஆகிவிடும்.
அ.தி.மு.க.. அரசே மனித நேயமற்ற முறையில் துப்பாக்கிச் சூடு மூலம் படுகொலைகள் நடத்தினாலும், உயர்நீதிமன்றம் இன்றைக்கு மக்களின் பக்கம் நின்று, இந்த மனித நேயத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. மக்கள் நலனிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், நீதித்துறை வைத்துள்ள நன்மதிப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.
அமைச்சரவையைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலை மூடுவதை கொள்கை முடிவாக எடுங்கள் என்று வலியுறுத்தியிருக்கிறோம். அந்தக் கோரிக்கை இன்னும் அப்படியே இருக்கிறது. ஆலையின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால்- தமிழக அரசைக் கேட்காமல் உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு தடை ஏதும் விதிக்கப்படாமலிருக்க உச்சநீதிமன்றத்தில் உடனடியாக “கேவியட்” மனுவினை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் வழக்கில் மக்களுக்குச் சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில் இன்றே முதலமைச்சர் தமிழக அமைச்சரவையைக் கூட்டி உயர்நீதிமன்றத்தின் முழுத் தீர்ப்பினையும் அமைச்சரவை முன்பு வைத்து தீர்ப்பை வரவேற்று ஒரு அமைச்சரவைத் தீர்மானமாகவே வெளியிட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உயநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு துணை முதல்வர் ஓபிஎஸ்சும் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், “அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த படி, பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும்" என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.