ஆதவ் அர்ஜுனா Pt web
தமிழ்நாடு

”கலைஞர் கூட அப்படி செய்யவில்லை” - திமுக மீது ஆதவ் அர்ஜுனா கடும் தாக்கு!

பிகாரில் நிதிஷ் குமாரின் கட்சியை ஒழித்து அம்மாநிலத்தின் ஆட்சியை பாஜகவினர் எப்படி கைப்பற்றினார்களோ; அதேபோல, ஸ்டாலின் தனது கூட்டணி கட்சிகளிடம் அதை செய்து வருகிறார் என தவெக தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. திமுக, அதிமுக, நாதக ஆகிய கட்சிகள் ஏற்கனவே களத்தில் உள்ள சூழலில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளார். இந்த சூழலில் தான், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா-வுக்கு ஏற்கனவே, தவெக தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வில்லிவாக்கம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ஆதவ் அர்ஜுனா

இந்நிலையில் தான், வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வரும் அவர், ஆளும் திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார். அதன்படி இன்று, ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பக்தவச்சலம் எப்படி இருந்தாரோ; அதேபோல மு.க. ஸ்டாலின் தற்பொழுது உள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்காக மட்டுமே திருமாவளவனை மாநில அரசியலுக்கு வராமல் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

திருமாவளவன் ஒரு வாரத்திற்கு முன்பு மக்களுக்காக மாநில அரசியலுக்கு நான் வருவேன் என சந்தோஷமாக கூறியிருந்தார். விசிக கட்சியில் திமுகவின் ஆதரவாளர்கள் யார் யார் இருந்தார்களோ அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காமல் புதிய நிர்வாகிகளுக்கு சீட்டு வழங்கி உள்ளார். இந்த சூழலில் தான், சபரீசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் அழுத்தத்தால் திருமாவளவன் மாநில அரசியலில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

கனிமொழி

மேலும், கனிமொழி மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகனை ஒதுக்கி விட்டார்கள். சொந்த தங்கைக்கு முதல்வர் ஸ்டாலின் துரோகம் செய்து தன் மகனை முதல்வராக உட்கார வைக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உண்மை விசுவாசி ஜோதி மணியும் மாணிக்கம் தாக்கூரும் தேர்தலை புறக்கணித்துள்ளனர். திமுகவுடன் யார் சேர்ந்தார்களோ அவர்கள் அழிந்துள்ளனர். அதற்கு உதாரணமாக வைகோ, மதிமுக கட்சி வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். அப்படி போட்டியிட வைப்பதற்கான நோக்கம் என்ன? பாஜகவினர் பிகாரில் நிதிஷ் குமாரின் கட்சியை எப்படி ஒழித்து அங்கு ஆட்சியை கைப்பற்றினார்களோ; அதேபோல முக ஸ்டாலினும் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளிடம் அதை செய்து வருகிறார். கலைஞர் கூட அப்படி செய்ததில்லை.

விஜயகாந்த் இருக்கும் வரை திமுக தீய சக்தி ஒழிய வேண்டும் என்பது அவரது கோட்பாடாக இருந்து வந்தது. ஆனால், தேமுதிக இன்று திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. அப்படி செய்வதால் விஜயகாந்தின் ஆன்மா சாந்தி அடையாது. விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனுக்கும் திமுக கூட்டணியில் உடன்பாடு இல்லை என்ற தகவலும் வந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு அழுத்தம் கொடுத்து ஒரு தொகுதி குறைத்து போட்டியிட வைத்து உள்ளனர். இந்த நிலையில், எங்கெல்லாம் ஜனநாயகத்திற்கு விரோதமாக இருப்பவர்களுக்கு எதிராக அண்ணா மற்றும் பெரியார் எப்படி குரல் கொடுத்தார்களோ அதுபோன்று நாங்களும் குரல் கொடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.