மின் கட்டண உயர்வு பிரச்னை Pt web
தமிழ்நாடு

”முதலில் மின்வெட்டு.. இப்போது மின்கட்டணம்; தவெக ஆட்சியில் பிரச்னை தான்” - மு.க. ஸ்டாலின்

தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்; முதலில் மின்வெட்டுப் பிரச்னை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்னை என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்.

Premkumar S

தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதத்தை ஒப்பிடுகையில், ஜூலை மாதம் மிக அதிகமான மின்கட்டணம் வந்திருப்பதாக எழுந்த மக்களின் புகாரையடுத்து, 3.70 லட்சம் வீடுகளுக்கு அதிக மின் கட்டணம் வந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தி ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க மின்வாரியத் தலைவர் வி. அருண்ராய் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச்சூழலில் தான், தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான் எனவும் முதலில் மின்வெட்டுப் பிரச்னை; இப்போது மின்கட்டணத்தில் பிரச்னை எனவும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக முன்வைத்திருக்கிறார்.

ஸ்டாலின்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான். முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது. இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.